வண்டி போய்க்கொண்டிருக்கிறது
"வண்டி போய்க்கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ரமணனின் 74 கவிதைகள் மற்றும் கானங்களின் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. வெளியீட்டாளர்: “ஆதாரம்”, 14, அஷ்டலக்ஷ்மி தெரு, முத்துலக்ஷ்மி நகர், சிட்லபாக்கம், சென்னை 600064.
விலை: ரூ. 200. (ரமணன் குரலில் பாடல்கள் கொண்ட குறுந்தகடுடன்)
வண்டி போய்க்கொண்டிருக்கிறது
வான மிடிந்து விழுமிடம் நோக்கி..சலங்கை சலம்பும் ஊமை மாடுகளின்
சாவகாச வேகம்
சக்கரங்களின் ஆயாசத்தைச்
சாலைக் கற்கள் வம்பளக்கும்ஏதோவொரு பேதைக்கணத்தில்
பாதை கோரிய உடனேயே
பயணமென்றும் தொலைவென்றும்
வாதைகள் நிச்சயமாகி
வாழ்க்கை வழக்காய்த் தொடர்கிறது..பொழிகிறது வெய்யில்
பொரிகிறது பூமி
விழுதுகளின் களைப்பு
பெருமூச்சே விசிறிபள்ளங்களே வழித்தடமாகப்
பழகித்தான் போனாலும்
நிலவெடிப்பில் இடறி விழுவதை
நிறுத்தவே முடியவில்லைஅசதிகள் ஒரு பக்கம்
பிசகுகள் ஒரு பக்கம்
ஒன்றைத்தான் மற்றொன்று
என்றேனும் மறிக்காதோ?வேட்கை நெருப்பு திசைகாணாமல்
மூட்டிய நெஞ்சை முழுங்கத் துவங்குவதாய்..
காய்ச்சிய சூடு கையைச் சுட்டதால்
கதிரவன் மெல்லக் கனிந்து வருகிறான்சாயங் காலம் ; ராகமாகும்
வண்ணங்களின் பொன்னம்பலம்
தீயில் தேனை ஊற்றிக் காதல்
தீங்கள்ளையதில் தெளித்து வரைந்த
சித்திரங்களுக்குச் சிறப்பிலச்சினை
முத்திரையிட முளைக்கும் விண்மீன்கள்கவிதைக ளாகிக் கனல்வதற்காய்
ஆழக் கிடந்த கற்பனை யெல்லாம்
அப்பட்டமாக அம்பலமாகி
ஊசி முனையில் உயிர் துடிக்கும்
உன்மத்தக் கோலம் பொன்னந்தி வானம்
தேவதைக் குளியல் தெரிசனம் தானெனில்
நாண மென்பது நரர்க்கு மட்டுமா!வண்டி போய்க்கொண்டிருக்கிறது
வான மிடிந்து விழுமிடம் நோக்கி..சரிகை அங்கே சரிகிறது! அதன்கீழ்
பாதை முடியும்! பாதம் மிளிரும்!
இதயம் பதைக்க இருமா டுகளும்
உணர்ச்சி யின்றி உந்துதல் பெறும்கதிரவனின் நிராகரிப்பால்
களைத்து விட்டது வானம்
கருமையே வெளியின் நிறமெனும் ரகசியம்
ஒவ்வோ ரிரவும் உடைபடும் தருணம்
கன்னி நிலவும் கனலும் கோள்களும்
விண்ணின் இதயம் வெளியே புடைத்து
இடைவி டாமல் வெட்டும் மின்னலும்
விம்மிச் சாகும் நெஞ்சை நோக்கி
வீழ விரையும் ஒளிக்கோ டுகளும்
சதங்கை அறுந்த சபையில், கால்களின்
சுவாசம் துடிக்கும் விண்மீன்களும்
இலைவி ளிம்பில் நிலவின் முத்தமும்
இடை மீறிய தென்றலின் வெட்கமும்
இணைந்து காப்பாற்றும்..வெகுவி ரைவில் விந்தை அந்தி
விண்ட கனவாய் விட்டுப் போனது
திகுதிகு திகுவெனத் திசைகள் தொலைந்து
திரள்திர ளாயிருள் திரையைப் போட்டது
செடிகொடி யெல்லாம் பேய்க்கா வடியாய்த்
தென்றலில் ஊளை சேர்ந்து கொண்டதுகிண்ணங் கவிழ்த்த அண்ட விளக்குகள்
கீற முடியா இருளைக் காட்டும்
மின்ன லிருட்டை மிகைப்ப டுத்தும்
கண்ணை அவித்துக் காதில் சிரிக்கும்மந்த மாடுகள் மருளு வதில்லை
கறுத்த கண்கள் கங்குக ளாகிப்
பார்த்த திக்கே பாதையாகிக்
கால்கள் புழுதி சலிக்க நடந்தன
காலத் தேதான் சாணம் விழுந்தனஅடர்ந்த இருளில் அடங்கிய நெஞ்சில்
நினைவும் கனவும் குழம்பிக் கொண்டன
தொடர்ந்த உணர்வு குரல்க ளாகிச்
சித்த மெங்கும் சில்லரை விழுந்தனஇருளை வெறித்துப் பார்க்கும் கண்கள்
உறங்கு வதுபோல் ஒடுங்கும் விளக்கு
மாடுகளின் கழுத்து மணியும்
பாடு படுமிரு சக்கரத் தேம்பலும்
முண்டா சுக்குள் முணுமுணுக்கும் காற்றும்
நினைவுத் திரியின் கடைசிச் சுடர்கள்
சுருள்சுரு ளாயொரு சரிவுப் பாதையில்
பிரக்ஞை இறங்கிப் பெயரை இழந்ததுவண்டி போய்க்கொண்டிருக்கிறது
வான மிடிந்து விழுமிடம் நோக்கி..சரியும் சுழலின் மூலையி லெல்லாம்
முளைக்கும் குமிழ்கள் கனவுக ளாகி
முழுதும் பார்க்குமுன் முறிந்து போகும்
மூச்சில் கலந்து முதுகை அழுத்தும்குறும்புக் காரச் சிறுவ னொருவன்
வாசல் மணியை அழுத்தி விடுகிறான்
வந்து பார்த்தால் பயலைக் காணோம்
காட்சி வந்து கண்ணை மறிக்கத்தான்
கதவு திறந்தது புரிகிறதுமறுபடி வானம் சிவக்கிறது
மறுபடி தேகம் சிலிர்க்கிறது
இருளின் விலக்கம் ஒளியைக் காட்டிலும்
எழிலோ வியமாய் விரிகிறதுசின்னச் சின்னச் சிறகு விசிறும்
வன்ன வன்னப் பறவைகள்
உன்னும் கண்களில் துள்ளும் நெஞ்சினை
உந்தும் உயிரே ராகமாகி
ஒளிந்து கொண்ட சூரியனை
ஊருக்குக் கொண்டுவரும்பொலபொலவென்று விடிந்தது பொழுது
பூரண மாக விழுந்தது இரவு
உலகெலாம் மீண்டும் ஒருமுறை வாழ்ந்திட
உயிர்கொண் டதுபோல் உதித்தது காலைவிடிந்தது காலை! முடிந்தது பாதை!
விரலருகே என் வீதிமுனை!
விசைந்து சொடுக்கின விரல்கள்! கொஞ்சம்
விரைந்தன சலன மிலாத மாடுகள்சக்கரங்கள் அயர்ந்தன
சஞ்சல மற்ற மாடுகள் களைத்தன
சாலை முறிந்து மேலும் தொடர்ந்தது
யார்சொன் னார்புவி உருண்டை என்று?தொட முடிந்த தருணத்தே
தொடுவானம் பரிகசிக்கும்
விடமுடியாக் கண்முன்னே
விரல்முனையில் நீளும்அயர்ந்த சக்கரங்கள்
அவையாகவே உருளும்
அண்ணாந்த மாடுகள்
அவையாகவே முன்தொடரும்வலிந்து விதி சிரித்தாலும்
வானில் பலர் திகைத்தாலும்
வலி பழகி வலித்தாலும்
வந்த தெல்லாம் சென்றாலும்வண்டி போய்க்கொண்டிருக்கிறது
வான மிடிந்து விழுமிடம் நோக்கி..


