கொஞ்சம் காதல்
ஓயாத பசுமை வயலில்
ஒரேயொரு வெள்ளைப் பறவை
உள்ளத்தை நீதான் என்ன
ஒயிலாக ஆளுகின்றாய்!
தரிசனம் நீ! ஏனோ
தவக்கோலம் போல நிற்பாய்
இலையுதிர் காலம் போல
யுகமெலாம் கழன்று புரள....
சரியெனக் கொஞ்சம் நெஞ்சம்
மரநிழல் சாய்ந்துகொண்டால்
பளீரெனப் பறந்துசெல்வாய்
பயிரெலாம் பதறப் பதற....
பளிங்கிலே பவளம் போலப்
பாதங்கள் பார்த்த நினைவு
பயிர்மீதில் இங்குமங்கும்
பாவாமல் தாவும் கனவு
சிறைவைத்துச் சென்றது சிறகு
பிரிவில்தான் புலப்படும் உறவு.....உடலோடு கொன்ற உயிர்
உயிரோடு கொன்ற உடல்
படப்பட இன்னும் இன்னும்
படத்தூண்டும் வஞ்சனைகள்
முற்ற நிலவின் மென்னொளியில்
வற்றிய உதடுகள் நீர்கேட்க
பற்றி இழுத்துப் பதித்த உடனே
பற்றிக் கொண்ட நெருப்புக் கணங்கள்
நடக்கும்போது யாவும் சொர்க்கம்
நினைக்கும்போது சொர்க்கமும் நரகம்
கடக்கும்போது சிவக்கும் கதிரின்
கடைசித் தருணம் கண்டு நிற்கிறேன்
கப்பிக்கொண்ட கருஞ்சிவப்பில்
களைத்தயர்ந்தன ககனமும் பூமியும்
செப்பவொண்ணாத் துயரில், உனது
சேதி தேடி வானம் பார்த்தேன்
ஊர்ந்து குறுக்கே விழுந்து மறைந்தது
ஒரேயொரு நட்சத்திரம்.....எத்தனை முறை தழுவினோம்!
எத்தனைக் கோணங்கள்!
என்னென்ன முத்தங்கள்! வ்
ஏதுமினி மீதமில்லை
என்பதுபோல் இடையின்றி
உடல்கலந்து உயிர்கலந்து
உணர்வெல்லாம் கரைந்தொழிந்து
அத்தனையும் ஆனதென்று
அயர்ந்து கிடக்கையிலே
சீண்டிய விரலால்
சிலிர்த்த மார்புகளின்
நிறம்மாற, நெஞ்சத்தின்
நிலைமாற அம்மவோ!
மொத்தமாய் யாவுமென்
முன்வந்து நிற்கிறதே!
போதுமெனும் நினைப்பே
காதலுக்கு மரணம்
தேகத்தின் வளைவினிலே
மோகத்தின் ஜனனம்.சுவாசத்தை யாரும்
குலவி மகிழ்வதில்லை
கவனித்தால்தானே
காதலும் முத்தமும்?!
விரித்த வலையில்
விழுந்த சிலந்தியாய்
எண்ணங்கள் சுருக்கிழுக்க
என்னெதிரே மிகமெதுவாய்
இறக்கத் துவங்கினேன்
கலந்தது பிரியுங்கால்
கண்ணெல்லாம் நதிபொங்கிப்
பளபளக்க, சொல்லின்றி,
படியுருண்ட குடமானேன்...
உள்ளிருக்கும் பாட்டை
உணர்ந்ததில்லை கவிஞன்
புறப்பட்டுப் போனபின்பு
பொருளில்லை..நெருக்கமில்லை..
இருக்கும் போதே
இருப்பதை உணர்ந்துகொண்டால்....?
ஒருபோதும் நடப்பதில்லை
உயிர்போனால்தான் வாழ்க்கைமனவீணை மீட்டிவரும்
புதுப்புது ராகத்தை
தினமொரு வரியாகத்
தனைமறந்து எழுதிவைத்தாய்
கவிழ்த்த இதயத்தின்
கவின்மிகு மலர்களுக்கு
கடிதங்கள் என்றொரு
கள்ளப் பெயர்வைத்தாய்!
பனிக்காற்றில் உடல்சிலிர்த்துப்
பாதையிலே மறைந்துவிட்ட
பாரிஜாத மலர்களினைப்
பரிவோடு தொகுத்தளித்தாய்...
இடிந்துவிட்ட சொர்க்கத்தில்
இனியெதற்குக் கிண்ணமென்று
அவற்றையெல்லாம் நானிந்த
அலைகடலில் எறிகின்றேன்
மனவிம்மல் போல் அலைகள்
மாறிமாறி வரும்போது, அது
மறுபடியும் மறுபடியும்
கரையேறப் பார்க்கிறது!
பிரிகின்ற குழந்தையின்
புரியாத தத்தளிப்பு
விழுகின்ற சூரியனின்
வினோதத் தவிதவிப்பு.
ஒருமுறை என் காலை
ஒற்றிவிட்டுப் போகிறது
அதுவே
காதல் சாம்ராஜ்ஜியத்தின்
கடைசி முத்தம்...ஒருவாறு புரிந்துகொண்டேன் உன்னை...
உச்சிப் பிடரி பொறிபறக்க
உதட்டில் மின்னல் ஊற்றிய போதும்
வார்த்தை இன்றி ஏதோ பேசி
வாழ்வுக் கிண்ணம் சரிந்த போதும்
உடம்பின் அணுக்கள் யாவும் சிலிர்க்க
உயிரோடு என்னை அணைத்த போதும்
மெல்ல மெல்ல என் உயிரைக் கழற்றி
மினுங்க அணிந்து மகிழ்ந்த போதும்
சொல்லிக் கொள்ள ஒருதுளி உயிரை
நெற்றி முத்த மிட்ட போதும்
ஒருபோதும் என்னைப் பிரியாமல்
ஒருகணமும் கலந்து விடாமல்
உறியில் எந்தன் உயிரை மாட்டி
ஊஞ்சலிட்டுக் கொஞ்சிய போதும்
ஒருவாறு புரிந்து கொண்டேன் உன்னை.
சேர்த்துப் பார்க்கும் காற்றேதான்
சிதறவைத்தும் மகிழ்வதுபோல்
வார்ப்பே வஞ்சமும் வாஞ்சையுமாய்
வளைய வருகிறாய் வம்பாக!
மதுவை அறிந்த வண்டு 'இனிமேல்
மயங்கேன் நான்,' எனச் சொன்னால்
மலரெல்லாம் சிரிக்காதோ?
மகரந்தம் பறக்காதோ?
நோயுற்றோன் துயர்நீங்க
நுழைகின்றேன் உன்வாசல்
உள்ளே
நூபுரம் ஒலிக்கிறது
வெளியே
நோய்நின்று சிரிக்கிறது..முடிந்த கதை
ஓர்
உள்ளமொன் றிங்கே உடைந்து கிடக்கிறது
உதிர்ந்த மலரின் இதழ்களைப் போலே..
கண்ணீர்த் துளிகள் சற்றே பரவிச்
சிதைந்த துகள்களைச் சேர்க்க முயலும்
கடலை நிறுத்த முயன்று பார்க்க
மழலை மணலில் எழுப்பிய வீடுகள்!
மலர்களைத் தொடுக்கலாம்; இதழ்களை?
மலையை உடைக்கலாம்; மண்ணை?
எந்த நந்த வனத்திலிருந்தோ
தப்பித்து வந்த தென்றல் காற்று
உடைந்த துகள்களை உரசிப் பார்க்கும்
உயிர்த்தது போலோர் ஐயம் தோன்றும்
எதனால் இந்தச் சிதறல் இங்கே
கல்லறை யற்ற கதையின் சுவடுகள்?
எவருக் கிங்கே விடைகள் தெரியும்?
எவர்தான் இங்கே கேள்விகள் கேட்பார்?
உருண்டு கிடக்கும் கற்களைப் பார்த்து
உடைந்த கதையைக் கேட்டவருண்டா?
காய்ந்து வெடித்த பூமியைக் கண்டு
கணமேனும் நின்றவர் யாரேனுமுண்டா?
உதிர்ந்து விழுந்த நட்சத்திரத்தின்
உண்மைக் கதையைக் கேட்டவருண்டா?
சாலை வளைவில் கரையுமந்தக்
கல்லறைக் குயிலைக் கருத்த மலர்களைக்
கண்டு கண்கள் பனித்தவருண்டா?
அடியெடுத்துத் தர ஆளிங்கில்லை
அனாதைக் காவியம் அமைதியாய்த் துயில்கிறது..
கொண்ட கள்ளாலேயே போதை
கொண்டு மயங்கிச் சரிந்த கோப்பையாய்..
தன்னுடல் வியர்வைத் திரவத் தணலில் வ்
தானே மூழ்கிப் போன உழவனாய்..
நெஞ்ச மின்னல் நாவில் இடித்ததும் வ்
காணா வாக்கினைக் கண்ட அதிர்ச்சியில்
மீண்டும் ஊமையாய்ப்போன ஊமையாய்..
தானே உதிர்த்த கண்ணீர்த் துளிகளில்
தன்னுதிர்வுகளைத் தஞ்சம் கேட்கிறது..
மீண்டும் உயிர்பெற் றெழுந்திட அல்ல!
உருத்தெரியாமல் கரைந்து போக..
அங்கே..
செவ்வான் கதிரின் கடைசிச் சிமிட்டல்!
புதுப்பொலிவுடனே நாளை திரும்பக்
குளிக்கப் போகிறது கடலுக்குள்ளே..
இங்கே..
சூரியக் கதிர்கள் சிமிட்டவில்லை
சிதைந்த துகள்களே சிமிட்டுகின்றன
கண்ணீர்க் கடலினுள் கரையப் போவது
காலை, மீண்டும் வந்திட அல்ல!
காவிய மொன்று சங்கமமாக
கடலே சங்கமமாகிப் போக...இன்னும் சிலநொடிகள்!
இறங்கித்தான் ஆகவேண்டும்!! வ்
நீ.நான்..என்பார், அந்த
நிலை மாறத்தான் வேண்டும்
கன்னற் பேச்சுக்கள்
காதினிலே குறுகுறுப்பு
சின்ன விளையாட்டு
சிலநேரக் கண்பனிப்பு
என்று பலவாறாய்
இன்புற்றிருந்ததெல்லாம்
இன்னும் சிலநொடிக்குள்
எங்கோ பறந்துவிடும்!
உறவாகி விடுமென்றா
உதடோரம் புன்னகைத்தோம்?
மறைவாகக் கண்ணிமைத்தோம்?
மனமார ஸ்வப்பனித்தோம்?
எந்தக் கூட்டத்தில்
எங்கெங்கு இருந்தோமோ
அந்தக் கூட்டந்தான்
அங்கங்கே சேரவந்தோம்
சேர்வது வேறு! இணைந்து
செல்வது வேறு! என்றிந்தப்
பார்வைக்குத் தெரிந்திருந்தால்
படாதபாடு படுவோமா?
நிலையம் இருப்பது
நீ..நான்..இறங்கத்தான்
நினைவொன்று இருப்பது
நீ..நான். துடிக்கத்தான்..
இருப்புப்பாதை
இணைந்திடத்தான் போகிறது
விருப்பேது வெறுப்பேது
விவரமற்ற சூனியத்தில்...?


