காந்திமதி அம்மன் பதிகம்
எந்தவழி யென்றுபுரி யாமலொரு நொந்தவழி
ஏகித் திரிந்திருந்தேன்
எந்திர மசைத்தபடி என்வச மிழந்தபடி
ஏங்கித் தவித்திருந்தேன்
வந்தவழி யோயிருள வரும்வழியில் கரிசுழல
வந்திநிற் கின்றகலி யில்
வாழ்வினைப் பாடவா? விதியினைச் சாடவா?
வலிமறக் கப்பாடவா?
வார்த்தைசொன் னாலுடன் பார்த்தனா வேனுனை
வாயாரப் பாடுவேனே!கனவில்வரு வாயென்றன் கவிதையில் தோன்றியெனைக்
கதிகலக் கச்செய்குவாய்
கடலில்வரு வாய்சின்னப் படகில்வரு வாய்மணற்
கரைதனில் பதம்பரவுவாய்
நினைவில்வரு வாய்நீளும் நிழலில்வரு வாயென்றன்
நெடுமூச்சி லேவிரவு வாய்
நெஞ்சில்வரு வாயிங்கு வந்தென்ன போயென்ன
நின்றென்ன சொல்கதாயே!
நேரில்தொடு வானாக மாறியெனை நீகூட
நித்தம் வதைக்கிறாயே!
நீள்விழி சிரிக்கின்ற நித்திலப் பூங்கொடிக்
கென்னகுறை சொல்கநீயே!பாடவிலை யாவுன்னைப் பார்த்தவுடன் சின்னமனம்
பந்தாட்டம் போடவிலையா?
பற்றவிலை யாகனல் பரவவிலை யாபாழும்
பந்தங்கள் சிதறவிலையா?
ஓடவிலை யாதுயர்கள்? ஓயவிலை யாவினைகள்?
ஒடுங்கவிலை யாயெண்ணங்கள்?
ஒன்றும்குறை வின்றிநடந் தென்னபயன் நின்கருணை
மின்விழி சிரிக்கவிலையே!
ஓடம் துடுப்பின்றி ஓலக்க டல்மீதில்
ஒசிந்துநட மாடுகிறதே!
ஒருவழி யெனக்கருள உடன்வர உனக்குளது
மிருவிழிச் சுடர்களன்றோ?கண்ணிலே கனல்பூக்கக் கனன்றுகனன் றென்னெஞ்சம்
கதறியலை பாய்ந்திருக்க
காந்திமதி காந்திமதி என்றபெய ரேதுன்பக்
காதுகளில் பாய்ந்திருக்க
புண்ணிலே நூறுவகை பூத்தயென் விதியெண்ணிப்
பொழுதெலாம் நான்துடித்தேன்
புவனங்க ளைச்சுற்றிக் கவணாடும் உன்னடியே
புகலென்று வீழ்ந்துவிட்டேன்
எண்ணிலாத் துன்பங்கள் எல்லாம் முடிந்ததென
எழுந்துநட மாடுபெண்ணே!
எல்லையில் லாததிரு நெல்லையம் பதிவீசும்
முல்லைச் சிரிப்பாரமே!மாணிக்க மூக்குத்தி மாண்பொன்றி னைத்தேடி
மலர்ந்தகதை யைப்பாடவா?
மலரெலாம் பூங்குழல் தலமீதி லேவாசம்
மணந்தகதை யைப்பாடவா?
காணிக்கை யாகவென் கண்ணீரை உள்ளளவும்
கவிதையாக் கிப்பாடவா?
கவிபாட நீகேட்டு ஜதிபோட அதுகேட்டு
கலியோட நான்பார்க்கவா?
தோணியில் லாமலொரு தூரப்ர யாணத்தில்
கோளின்றி நாள்குறித்தேன்
துக்கக் குளத்திலுன் செக்கச் சிரிப்பினொலி
தொக்கிப் பிழைக்கிறேனே!


