பெண் பார்த்த படலம்
என் மனைவியும் நானும், யார் திருமணத்திற்குச் சென்றாலும் ஒரே வாழ்த்துத்தான் சொல்வோம்: ‘நீங்கள் இருவரும் எங்களைப்போல் இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.’
எனக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று என் தாயார் அழகான கடிதமொன்றை எழுதினார்கள். நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்: ‘சரி; ஆனால் பெண்பெண்ணாய்ப் பார்க்கின்ற பேதைமையிலிருந்து என்னைக் காப்பாற்று.’ எனவே, நான் பெண்பார்க்கப் போவதில்லை என்று நிச்சயமாயிற்று. சில நாட்கள் கழித்து, என் தாயார், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, ‘இவளைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறோம். உன்முடிவு என்ன?’ என்று கேட்டிருந்தார்கள். கொஞ்சம் க்லாக்சோ பேபி போல், சேலையில் சிரமப்பட்டுத் தோற்றமளித்த அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் சொல்லமுடியும்? வாழ்ந்துபார்த்தே புரிந்துகொள்ள முடியாதவர்கள்; அதிலும் பெண்கள்! மதுரையிலிருந்த நான், நேரே மீனாட்சி கோவிலுக்குச் சென்றேன். ஒரே சினிமாக் காட்சிதான் போங்க!
காலை வைத்தவுடனேயே எல்லா மணிகளும் சேர்ந்தொலிக்க அடுக்கடுக்காய் தீபாராதனை. நான் கையில் ஒரு கவரோடு நின்றுகொண்டிருக்கிறேன். விறுவிறுவென்று வந்த அர்ச்சகர், வெடுக்கென்று கவரைப் பறித்துச் சென்று, அம்மனின் காலடியில் கிடத்தி, கற்பூரம் காட்டி, பெரிய மாலையைக் கழற்றி என்கழுத்தில் போட்டு, இலையில் ஏகப்பட்ட குங்குமத்தைக் கொடுத்து, கவரைத் திருப்பித்தந்து, ‘எல்லாம் நல்லது போடா,’ என்றாரே பர்க்கலாம்!!
பிரமித்துப்போன நான், வெளியே வந்தபோது புரிந்துகொண்டேன். தாயாருக்குக் கடிதம் போட்டேன். ‘இவள்தான் என்மனைவி. நான் அவளைப் பார்க்கத் தேவையில்லை. அவள் பார்க்க விருப்பப்பட்டால் நடக்கட்டும்.’ அதன்படி, பிள்ளைபார்க்கும் படலம் (!) பெசண்ட் நகரில் அவள் பெரியம்மா வீட்டில் நடந்தது. பத்மா சுப்ரமண்யம் அவர்களும், அவர்களது அண்ணியாரும் வந்திருந்தார்கள். ( “நீ யாரையாவது பண்ணிண்டுடாதேடா! நாங்க வந்து பாக்கறோம்.”)
அகன்ற நெற்றி; கொடுவாள் மீசை; பூஞ்சை உடம்பு; விலாவெலும்புகள் தெரிய ஒரு ஆரஞ்சு ஜிப்பா; பெரிய நெற்றியில் கூராகக் குங்குமம். ஏறத்தாழச் சம்பல் கொள்ளைக்காரன்போல் அந்த நாளில் (அந்த நாளிலும் என்கிறார் அப்பா!) தோற்றமளித்த நான் அவர்கள் வீட்டில் நுழையும்போது, ‘என்னடி இது! பொட்டெல்லாம் இட்டிண்டிருக்கான்!’ என்ற பலத்த முணுமுணுப்பும், ‘குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக்காரா’ பாட்டும் என்காதில் விழத்தான் செய்தன!
ஏதோ ஒரு பந்து பொத்தென்று காலில் விழுந்து தாவியது. அதுதான் பெண்ணென்றார்கள். பெண்வீட்டுக்காரர்கள் ‘ஓ! ஹிந்துஸ்தானியெல்லாம் பாடுவாளே!’ என்று கேட்காத கேள்விக்குப் பலத்த குரலில் பதில் சொல்லிவிட்டுப் பாடச் சொன்னார்கள். அவள் பாடினாள்.. கதவிடுக்கில் சிக்கிக்கொண்ட எலியும், கல்லறையிலிருந்து அப்போதுதான் எழுந்த அன்றலர்ந்த பேயுமான குரலைக் கேட்டுப் பீதியுற்று, நாற்காலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நானும் என் நன்பன் சுப்புவும் ஒருவரையொருவர் முழிபிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாய் விபரீதம் முடிந்ததும், அருமையான அல்வாவும், போண்டாவும் தந்தார்கள். இன்னொரு ரவுண்டுகூடப் பெண்பார்க்கலாமோ என்று தோன்றியது.
‘அவளோடு பேசவேண்டுமே’ என்றேன். ‘இங்கேயே பேசலாமே’ என்றார்கள் பெரியம்மா.
’என்னங்க இது, சினிமா ஷூட்டிங் மாதிரி ஆயிருமே’ என்றேன். என்தமிழ் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?! பத்மா சுப்ரமண்யம் அவர்கள், ‘நான் எங்காத்துக்குக் கூட்டிண்டு போறேனே,’ என்க அவர்களால் மறுக்க முடியவில்லை. காரில்தான் அவளுக்கு இந்தக் கவிதையைச் சொன்னேன்:
பாதையிலே தொலைவில் கிடந்தேன் நான் பார்வை படாதபடி - ஒரு
போதையிலே உடல்நெய்துவந்தாள் அவள் புன்னகை செய்தபடி - இன்ப
வேதனையில் மனம் விம்மிநின்றேன் நான் வார்த்தை இழந்தபடி - ஒரு
சாதனை செய்தது போல்பறந்தா ளவள் காற்றில் சிரித்தபடி..
அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?
மல்லிகைப் பந்தல் சிலிர்த்தது போலென் மனத்தில் பனித்துளிகள் - நான்
சொல்லெடுக்க அவள் ஸ்ருதியெடுக்க அங்கு சொர்க்கங்கள் தவமிருக்க
தெள்ளிய நீர்மடுவே ஒரு தேமலர் வீழ்ந்து தெளும்புதல்போல் - என்
உள்ளுணர்வூறிய கள்ளுறைக் கவிதையில் உண்மையெனத் தெரிந்தாள்
அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?
அவளுக்குப் பிடித்தது உடனே தெரிந்தது.
பத்தூக்காவின் நடன அரங்கு. மாடியில். பெரிய நிலைக் கண்ணாடி. என்னையும், அவளையும் விட்டுவிட்டு, ‘டேய்! உன்ன நம்பி விட்டுட்டுப் போறேண்டா!’ என்று கண்சிமிட்டிச் சென்றார்கள்.
அவள்தான் அனுராதா. என் காதற் கண்ணம்மா. கவிதைக்குக் கிரியா ஊக்கி. கடுமையான விமரிசகர். ‘இல்லற வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் பரஸ்பர மரியாதைதான். ஒருவரையொருவர் அவரவர் வார்ப்பு எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன்பின், பதியம்போடப்படும் நேசக்கொடிதான், நாளெல்லாம் நன்மலர்களாய்ப் பூத்துக் குலுங்கும்,’ என்பாள். இந்தக் காவல் தெய்வத்தோடு நான் கழித்த இந்த 26 ஆண்டுகளும் இனிமையானவை. பரிசாய் விளைந்தனர் இரட்டை மகன்கள்.
இன்றுதான் திருமணமானதுபோல் இன்றும் இருக்கிறோம்.
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்
என்ற பாரதி வாக்கின் பொருளை எனக்கு வாழ்வின் அனுபவமாய்த்தந்த என் மனையாளுக்கு வாழ்த்துச் சொல்லி, இதோ உங்களுக்கு அறிமுகம் செய்தேன்!
அரட்டையும், அர்த்தபூர்வமான பேச்சும், கலகலப்பும், அற்புதமான உணவும், அதைமிஞ்சும் காப்பியும் வேண்டுவோர் விசாகப்பட்ட்டினத்திற்கு வந்தே தீருவர்!
என்றென்றும் நானுந்தன் நண்பன்தான் தோழி
எப்போதும் முன்னிற்க வேண்டுமா சொல்நீ?
காலைக் கதிர்நோக்கி மலர்போல்நீ நடக்கையிலே, உன்
கண்படாமல் கருநிழலாய்ப் பின்தொடர்வேன் பணிவாக
மாலை நிறம்கண்டு மயக்கம்நீ கொள்கையிலே,
மவுனமாய் உன்னெதிரே மயங்காமல் விழித்திருப்பேன்
உச்சியிலே உன்பதத்தில் ஒடுங்கிக் குளிர்விப்பேன்
ஊருன்னைப் புகழுங்கால் உச்சிவரை குளிர்ந்திருப்பேன்
அச்சத்தில் நீதவித்தால் அனல்மெழுகாய் நான்துடிப்பேன்
ஆலயத்தே நீநுழைந்தால் எதுதெய்வம் எனவியப்பேன்
துன்பத்தில் துவளாமல் தூற்றுதலுக் கஞ்சாமல்
துணிவோடு நீயெழத்தான் தூபம்தினம் போடுகிறேன்
உன்கனவு நனவாக ஒவ்வொரு கணமும்நான்
உன்னுயிர்ப் பொறிதன்னை ஊதிமெல்ல ஊக்குவிப்பேன்
என்முகத்தை நீகாணாய் என்விதத்தை நீயறியாய்
எங்கெங்கும் நானிருப்பேன் காற்றிலே கீதம்போல்
உன்பதத்தில் பனித்துளியாய் உள்ளத்தில் தென்றலாய்
உன்னுயிரில் ஓரிழையாய் உன்னில்தான் நானிருப்பேன்
கன்றனைய தாயுன்னால் கலிதொலையப் பலகோடி
நன்மையுன்னால் வையத்தில் நடந்திடக் கண்பனிப்பேன்
சின்னப் பாதையோரச் சித்திரப் பனிப்புகையாய்..
சன்னல் நுழைந்துவரும் சந்தனத் தென்றலாய்..
என்றென்றும் நானுந்தன் நண்பன்தான் தோழி
எதிர்வந்து முகங்காட்ட வேண்டுமா சொல்நீ?
~ என்றென்றும்
என்றென்றும் உன்னவன் நான்
உன்பாதைத் தென்றல்நான்
கன்ணுக்குள் துள்ளும் மின்னல்நான் - அடி பேதைப்பெண்ணே!
கைவளரும் பூவின் வாசம் நான் - அடி பேதைப் பெண்ணே!
கால்பட்டுப் பூக்கும் கனவும் நான்!
காலார நீவரும்போது
உன்பாதம் ஒற்றிக் கொள்ளக்
கடலோரம் தொடரும் பாதையும்நான்!
தாலேலோ பாடும் பூக்கள்
தழுவாமல் குலவும் நிலவு
இதழோரம் தள்ளாடும் துளி நான்!
கன்னத்தைத் தொட்டுப் பதறிக்
காலெல்லாம் எங்கோ இடறி
மடிதேடும் மேகக்கூட்டம் நான் - அந்தக் கவிஞன் நெஞ்சில்
சொல்லாமல் கொல்லும் கவிதை நான் - உன் நெஞ்சுக்குள்ளே
மெளனத்தின் வெள்ளிக் கதவும் நான்!
~ என்றென்றும்
நிலவே ஓர் மாலை நேரம்
நீயாடும் கடலின் தீரம்
பதம்தொட்டுச் சிதறும் குமிழிகள் நான்!
வலைவீசும் மாலை வானம் v
விலைபேசி நாணும் போது - உன்
விரல்முனையில் மின்னும் செம்மை நான்!
மனமென்னும் சின்னக் குடிலில்
உன்கண்கள் தீபம் ஏற்றும்
உனைச்சுற்றிச் சுற்றும் உயிரே நான்! அடி பேதைப் பெண்ணே!
உன்பெருமை பாடும் குயிலே நான்! அடி பேதைப் பெண்ணே!
உன்முன்னும் பின்னும் நானேதான்!
~ என்றென்றும்


